Friday, February 26, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்





காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று அவர்களுக்குள் வருவது. இன்னொன்று, காதலர்களுக்கு மற்றவர்களால் வருவது. இதில் ரெண்டுமே இருந்தால் எப்படியிருக்கும்? எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் சார் ஜெஸ்ஸிய காதலிச்சேன்? என்று சிம்பு படம் முழுவதும் கேட்கும் கேள்வி எல்லா இளைஞர்களும், இளைஞிகளும் அவர்களுக்குள்ளாகவோ, அலலது நெருங்கிய நண்பர்களிடமோ கேட்டிருப்பார்கள். காதலின் சுகத்தையும், குழப்பத்தையும், அதனால் ஏற்படும் வலியையும் மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள்.

இஞினியரிங் படித்துவிட்டு சினிமா துறையில் அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்து ஒரு படைப்பாளியாக ஆசைப்படும் கார்த்திக். அவன் குடியேறும் வீட்டின் ஓனரின் மகள் ஜெஸ்ஸி. மலையாளி. இன்ஃபோஸிசில் வேலை பார்ப்பவள். பார்த்தவுடன் கார்திக்கின் மனதில் ப்ப்பச்சக் என்று ஒட்டிவிட, வழக்கமாய் எல்லா இளைஞர்களும் செய்வதையே கார்த்திக்கும் செய்ய, ஒரு சமயம் இது எல்லாம் ஒத்து வராது. என்று சொல்லிவிட்டு, ப்ரெண்டாக மட்டுமாவது இருப்போம் என்று ஒப்பந்தம் போட்டு, ஒப்பந்தம் போடுவதே உடைப்பதற்காகத்தான் என்று காதல் வயப்பட்டு, வீட்டை நினைத்து பயந்து,குழம்பி, தானும் குழம்பி, கார்திகையும் குழப்பும் ஜெஸ்ஸி. ஒரு கட்டத்தில் வீட்டிற்கு தெரிந்து பிரச்சனையாகி வேறு ஒருவனுடன் திருமணம் நிச்சயமாகி விட, கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை வெள்ளித்திரையில் பார்க்க..



கார்த்திக்காக சிம்பு. விரல் வித்தை காட்டும் பையனில்லை இவர். இவருக்குள் இவ்வளவு மெச்சூர்டான நடிப்பு இருக்கிறதா..? ஜெஸ்ஸியை பார்த்தவுடனேயே காதல் வயப்படுவதாகட்டும், காதல் கைகூடுவதற்காக அலைவதாகட்டும், கே.எப்.சியில் அவர் ஜெஸ்ஸியை பாலோ செய்ய, கிட்டே வந்த ஜெஸ்ஸி ”நீ என்னை பாலோ செய்றியா.?” என்று கேட்க, இவர் இல்லையே நீங்க தான் என்று சொல்ல, என் ஆபீஸ் இங்க் இருக்கு என்று ஜெஸ்ஸி சொல்ல. கே.எப்.சியும் இங்கதான் இருக்கு என்று சொல்லிவிட்டு ஜெஸ்ஸி போவதையே பார்த்துக் கொண்டிருக்க, சேல்ஸ்மேன் ஆர்டர் கேட்க, இருய்யா.. அவ போற வரைக்குமாவது பாத்துக்கறேன் என்று சொல்வது இளைஞர்களின் மன வெளிப்பாடு. அதே நேரம் கோபப்படும் இடத்தில் கோபப்படுவதாகட்டும், பல இடங்களில் வாய்ஸ் மாடுலேஷனிலேயே காதலையும், கோபத்தையும், இயலாமையையும் வெளிபடுத்தியிருக்கும் விதமாகட்டும், முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சியில் எனக்குள் ஒரு பெண் இருக்கிறாள் என்று ஜெஸ்ஸியிடமே ஜெஸ்ஸியை பற்றி சொல்லும் காட்சியில் சிம்பு நடிப்பில் மனதை அள்ளுகிறார். சிம்பு உங்களிடம் நிறைய எதிர்பார்கிறேன். விரல் வித்தைகளைவிட..



எனக்கு அவ்வளவாக திரிஷாவை பிடிக்காது. ஆனால் இந்த படத்தில் என் மனதை கொள்ளை கொண்டுவிட்டார். அவ்வளவு க்யூட். நம்பக்கத்துவீட்டு பெண்ணை போல நம் கண் முன்னே வளைய வருகிறார் ஜெஸ்ஸி சாரி திரிஷா. அவ்வளவு ஆப்ட் காஸ்டிங்க். சிம்புவை பார்வையாலேயே அளப்பதாகட்டும், கண்களின் குறுகுறுப்ப்பிலேயே பல விஷயஙக்ளை வெளிப்படுத்தும் முக பாவங்களாகட்டும், காதல வேண்டாமென மனதில் நினைத்தாலும், வேண்டுமென நினைக்கும் இன்னொரு பக்கம் அலைகழிந்து தானும் குழம்பி, அவளையே நம்பி சுத்திக் கொண்டிருக்கும் கார்த்திக்கையும் குழப்புவதாகட்டும், பெரும்பாலான காதலிகள், செய்யும் வேலையை கன கச்சிதமாய் வெளிப்படுத்தியிருக்கிறார். த்ரிஷா. க்ளைமாக்ஸிக்கு முன் சிம்புவும், இவரும் பேசும் காட்சியில் சிம்புவுடன் போட்டி போட்டு முயன்று தோற்றிருக்கிறார்.



இசை ஏ.ஆர்.ரஹ்மான். சொல்ல வேண்டியதில்லை ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட். படம் ஆரம்பத்தில் வரும் கிடார் படம் முழுவதும் விரவி நம்மை படத்தின் காட்சிகளோடு மிக இயல்பாய் ஒன்ற வைத்துவிடுகிறார். ஓமனப் பெண்ணே, பாடல், ஹோசன்னா பாடலும் படத்தில் பார்கையில் அட்டகாசம். ஆரோமலே பாடலையும், விண்ணைத்தாண்டி வருவாயா பாடலும் ஒரு ஆர்.ஆர். டிராக்காகவே உபயோகித்து மனதை அறுக்கிறார். இரண்டொரு இடத்தில் மிக நுணுக்கமான காட்சிகளில் வரும் ராக் இசை பிண்ணனி மட்டும் உறுத்துகிறது. மற்றபடி மீண்டும் ரஹமான் ஒரு இசை ராஜாங்கத்தை நடத்தியிருகிறார். நீங்கள் படம் பார்த்து விட்டு வெளி வரும் போது பாடல்களை முணுமுணுக்காமல் வந்தால் தான் அதிசயம். ஹாண்டிங் மியூசிக்.




மனோஜின் ஓளிப்பதிவை பற்றி சொல்லவே வேண்டியதில்லை ஏற்கனவே ஈரத்தில் கண்களுக்கு ஜில்லிப்பூட்டியவர்தான். மீண்டும் தன் திறமையான ஒளிப்பதிவால் மனதில் நிற்கிறார். முக்கியமாய் அந்த கேரளா வீடும், வெளிநாட்டு லொக்கேஷன் பாடல் காட்சிகளிலும், அமெரிக்க காட்சிகளிலும் அவ்வளவு துல்லியம். பல இடங்களில் வரும் அருமையான க்ளோசப் காட்சிகளில் இவரும், எடிட்ட்ர் ஆண்டனியும் பின்னியெடுத்திருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருப்பது கெளதம் வாசுதேவ் மேனன். சாதாரணமாகவே மனுஷனுக்கு லவ் ட்ராக் என்றாலே இவர் படங்களில் உருகி வழியும், இது காதலை பற்றிய படம் கேட்க வேண்டுமா? புதுசாய் காட்சிகள் ஏதுமில்லாவிட்டாலும், மிக சுவாரஸ்யமான காட்சியமைப்பினாலும், நடிகர்களின் ஒத்துழைப்பினாலும், ஒளிப்பதிவாளரினாலும், எடிட்டரினாலும், ஷார்ட் அண்ட் ஸ்வீட்டான வசனங்களினாலும், இயல்பான கேரக்டர்களினாலும் மனதை கவருகிறார். க்ளைமாக்ஸ் காட்சி தமிழ் சினிமாவுக்கு புதுசுதான். காதலர்களின் பாடி லேங்குவேஜ் ஆகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் அவ்வளவு இயல்பு. கண் முன்னே இரண்டு பேரை உலவ விட்டிருப்பது போன்ற உணர்வை கொண்டுவந்திருப்பதில் இயக்குனருக்கு வெற்றியே. சிம்பு கூடவே வரும் கேமராமேன் நண்பரின் கேரக்டரின் மூலம் பல இடங்களில் வாய்ஸ் ஓவரிலும், சில இடங்களில் நச்சென்ற வசனங்களில் மனதில் நிற்க வைத்திருக்கிறார்.



சில இடங்களில் வசனங்களை கொண்டே அந்த காட்சிக்கான காரணங்களையோ, அல்லது முந்திய காட்சியில் எப்படி, எவ்வாறு என்கிற கேள்விகளுக்குகான பதில்களை சின்ன சின்ன வசனங்களில் வெளிப்படுத்தியிருப்பது நைஸ். அதே போல் தனிமையான ஒரு பங்களாவில் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு நின்று கொண்டிருக்கும் போது பேசும் வசனங்கள் அத்துனையிலும் காதல். க்ளைமாக்ஸ் காட்சியில் ஜெஸ்ஸியை பற்றி சிம்பு பேசும் வசனங்களும் சரி, அவரின் நடிப்பும் சரி.. கவுதம் சிம்புவுக்கான சரியான தீனி கொடுத்திருக்கிறார். பல காட்சிகள் இதற்கு முன் எவ்வளவோ படங்களில் பார்த்த மாதிரி இருந்தாலும் நாயகன், நாயகி இடையே உள்ள இயல்புத்தன்மையினால் ப்ரெஷ்ஷாக இருக்கிறது.

இவருக்கு மட்டும் எப்படி பாடல்கள் இவ்வளவு அருமையாய் அமைகிறது?. பாடலகளையும், அதை படமாக்கியிருக்கும் விதமும், முக்கியமாய் சில பாடல்களை பின்ன்ணி இசையாய் உபயோகபடுத்தி, க்ளைமாக்ஸ் காட்சியில் மனதை அறுக்கும் அளவிற்கு ரஹ்மான் இசையை பயன்படுத்தியிருகிறார். படத்தில் மைனஸே இல்லையா என்றால் நிச்சயம் இருக்கிறது. திடீரென சிம்பு தனக்கு பாக்ஸிங் தெரியும் என்று சொல்லி சண்டை போடும் காட்சி, ஜெஸ்ஸியின் சில காட்சிகளின் குழப்பத்துக்கான காரணங்கள், அலப்புழாவில் ஜெஸ்ஸியை எந்தவிதமான பெரிய முயற்சியில்லாமல் போய் நிற்கும் முதல் சர்சிலேயே ஜெஸ்ஸி வருவது, சில இடங்களில் இன்னும் கொஞ்சம் எமோஷன் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் மேலோங்குவது, போன்ற சிற்சில குறைகளை தவிர. .. அவர்கள் விளம்பரங்களில் சொல்லியிருப்பது போல, க்ளைமாக்ஸினால் ஒரு வித்யாசமான காதல் கதை மீண்டும். க்யூட் & ஸ்வீட் மியூசிக்கல் லவ் ஸ்டோரி.



விண்ணைத்தாண்டி வருவாயா – A Sure Shot Feel Good, Lovable Movie