Monday, March 1, 2010

விண்ணை தாண்டி வருவாயா-விமர்சனம்கையளவு இதயம், அதில் கடலளவு சோகம்! இதுதான் விண்ணை தாண்டி வருவாயா. காதலில் விழுந்தவர்களை மட்டுமல்ல, விழாதவர்களை கூட போட்டு தாக்கிவிட்டு போகிறது படம். சிக்கி முக்கி கல் போல த்ரிஷாவும், சிம்புவும் உரசிக் கொள்ளும்போதெல்லாம் பெரும் நெருப்பில் குளிர் காய்கிறான் ரசிகன். கவுதம் வாசுதேவ மேனனின் இந்த படம் பிக்காசோ ஓவியம் போல எந்த பக்கம் பார்த்தாலும் அழகு!

ஹவுஸ் ஓனரின் மகள் த்ரிஷாவை முதல் பார்வையிலேயே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார் சிம்பு. இவரை விட ஒரு வயது மூத்தவரான த்ரிஷாவுக்கு சிம்புவை காதலிக்க ஏகப்பட்ட யோசனை. வயசு, இனம், ஓடிப்போன அக்கா, அப்பா அண்ணனின் கண்டிப்பு, என்று கணக்கு போட்டு காதலுக்கு 'நோ என்ட்ரி' போட அதையெல்லாம் உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார் சிம்பு. நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதா போல, ஒரு கணம் தேவதை. மறுகணம் காட்டேரி என மாறி மாறி சிம்புவை கொன்றெடுக்கிறார் த்ரிஷா. ஒரு கட்டத்தில் இவரை விட்டு விட்டு அமெரிக்காவுக்கு ஓடிப்போகும் த்ரிஷா, சிம்புவை மீண்டும் பார்க்கும் தருணம் எது? என்னவாகிறது அவர்களுக்குள் பொத்தி வைத்த காதல்? மனசை அறுக்கும் ரஹ்மானின் பின்னணி இசையோடு முடிகிறது படம்.

மார்க்கெட்டில் விற்கும் மொத்த பூசணிக்காயையும் வாங்கி வந்து சுற்றிப் போடலாம் சிம்புவுக்கு. எந்த கட்டத்திலும் மீறாத நடிப்பு. வழிய வழிய காதலோடும், குறும்போடும் திரிகிற இவரை பார்க்க பார்க்க மட்டுமல்ல, பார்த்தவுடனேயே பிடித்துப் போகிறது. (தனுஷ் கவனிக்க- இது படத்திலேயே வருகிற வசனம்) த்ரிஷா இல்லாமல் சிம்பு தனியாக இருக்கும் காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். சேர்ந்திருக்கும் காட்சிகளில் அநியாயத்துக்கு ரசவாதம். ப்ரண்ட்ஸ் என்ற ஜெட்டில்மேன் அக்ரிமென்டோடு பழக ஆரம்பிக்கும் சிம்பு, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அதை மீறி விரல் பழகுவது த்ரிஷாவின் விரல்களோடு. கால்களில் முத்தம், கண்களில் முத்தம் என்று முன்னேறி 'பச்சக்' என்று உதட்டில் முடிய, அந்த ரயிலிலிருந்து தள்ளியே விடப்படுகிறது 'ப்ரண்ட்ஸ்' என்ற உறவு. இவர்கள் தொடர்பான கேரள காட்சிகள் ஒவ்வொன்றும் காதலில் மீண்டும் மீண்டும் விழ வைக்கிற அபாயகரமான அவஸ்தை பள்ளம்!

எந்த படத்திலும் இதுவரை நாம் பார்க்காத த்ரிஷா. மூத்தவர் என்று முன்பே சொல்லிவிட்டதால், அங்கங்கே எட்டிப்பார்க்கிற மெச்சூரிடியை கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம். விலகவும் முடியாமல், நெருங்கவும் துணியாமல் தவிக்கும் தவிப்பை அசால்டாக சொல்லிவிடுகிறது அவரது முகம். "நீ என்னை ஃபாலோ பண்ணியா?" என்று கேட்கிறபோது அவரது கண்களில் தெரியும் எதிர்பார்ப்பு அழகோ அழகு.

வேண்டுமென்றே சிம்பு வெறுக்கும்படி நடந்து கொள்கையில் 'ஸாரிடா' என்று கெஞ்சுகிறது கண்கள். இந்த படம் த்ரிஷாவை இன்னும் ஐந்து வருடங்களுக்கு ரீசார்ஜ் செய்திருக்கிறது என்பதுதான் நிஜம்.

"உன்ன பசங்கள்ளாம் விரட்டு விரட்டுன்னு விரட்டியிருப்பானுங்களே..." சிம்பு கேட்க, "அவங்கள்ளாம் உன் கண்ணால என்னை பார்க்கலையோ, என்னவோ" என்று த்ரிஷா சொல்கிற வசனங்கள் அற்புதம். படம் நெடுக இப்படி கொட்டிக்கிடக்கின்றன கவிதைகள். ரகளைக்கும் பஞ்சமில்லை. அடிக்கடி த்ரிஷாவின் பின்புறம் பார்த்து தவிக்கும் ரசிகனின் வார்த்தைகளாக சிம்புவின் டயலாக் இப்படி நொறுக்குகிறது. "உன்னோட ஃபிரண்ட்டை பார்த்ததை விட 'பேக்'கை பார்த்ததுதான் அதிகம்"

படத்தில் நிறைய கேரக்டர்கள். ஆனால் பளிச்சென்று மனதில் நிற்கிறார் கேமிராக்காரராக நடித்திருக்கும் கணேஷ். இவரது குரலே ஒரு கேரக்டர் போல கவனத்தை ஈர்க்கிறது.

கண்ணா பின்னா கலாட்டாக்கள் இல்லாமல் அழகழகான காஸ்ட்யூம்கள். சிம்புவும் த்ரிஷாவும் ஸ்பெஷலாக நன்றி சொல்லலாம் நளினி ஸ்ரீராமுக்கு.

அழகிய நதியில் டைட்டில்கள் மிதக்கிற அந்த முதல் காட்சியிலேயே மனசை அள்ளிக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. அதன்பின் வருகிற ஒவ்வொரு காட்சியும் அவரது இருப்பை அழுத்தமாக சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அதுவும் கேரளாவின் அழகை குளிர குளிர பந்தி வைத்திருக்கிறாரே, ஜில்ல்ல்ல்ல்ல்!

ஆஸ்கருக்கு பிறகு வருகிற முதல் படம் என்பதாலோ, அல்லது ஸ்பெஷல் கவனிப்போ தெரியாது. ராக ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். மன்னிப்பாயா தொடங்கி, ஓமணப்பெண்ணே, ஹோசன்னா என்று அத்தனை பாடல்களிலும் ஏதோ ஒரு சொர்க்கம் தெரிகிறது.

படத்திலேயே ஒரு படம் வருகிறது. அதையும், இதையும் மிக்ஸ் பண்ணியிருக்கிற விதத்தில் கொஞ்சம் அலட்சியம் தெரிகிறது. பக்கத்து சீட் ஆசாமியிடம் 'டைம்' கேட்டு திரும்புகிற நேரத்தில் கதை புரியாமல் போய்விடுகிற அபாயம் இருக்கிறது. இரண்டு பேரும் ஒன்று சேர்ந்திட்டாங்களா என்ற கேள்வியோடு வெளியேறுகிறார்கள் பல ரசிகர்கள். தவிர்த்திருக்கலாமோ?

விண்ணையும் மண்ணையும் ஒருசேர அளக்கிற காதலை, அந்த பிரமிப்பு மாறாமல் உணர வைத்து 'போட்டு தாக்கியிருக்கிறார்' கவுதம்!

No comments:

Post a Comment