Monday, January 4, 2010

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்

பத்து மாதங்கள் மடியில் சுமந்து,
அத்தனை வலியில் தன்னை மறந்து,
ஒரு சேயைப் பெற்றெடுத்து,
மறு நிமிடம் தாயாகிறாள் பெண்.
ஆனால் நீயோ,
பல வருடங்கள் உனக்குள் சுமந்து,
உழைக்கின்ற நேரம் மறந்து,
இரட்டை ஆஸ்கார்-களை இனிதே பெற்று,
இசைக்கே தாயாகிவிட்டாயே!!!

காற்றை இசையாக்கினாய்!
நீரை இசையாக்கினாய்!
நெருப்பை இசையாக்கினாய்!
இப்படி நீ எல்லாவற்றையும் இசையாக்க,
இன்றோ! உலகமே சேர்ந்து,

உன்னை விதையாக்கி,
இசைக்கே விருதாக்கிவிட்டதே!!!


சென்னை கலை நிகழ்ச்சியில்,
விண்ணைத்தொட்ட உன் இசை நிகழ்ச்சியில்,
என்னை மறந்து நான் ஆடிய பொழுது,
நீ ஒரு கலைஞன் என்பதை உணர்ந்தேன்...

உன் காந்தக்குரலில்,
நீ சாந்தமாக பேசிடும் பொழுது,
அந்த சப்தம் கூட சங்கீதமான பொழுது,
நீ இனிமையானவன் என்பதை உணர்ந்தேன்...

ஆனால் இசைப்புயலே!!!
இத்தனை பாராட்டையும் பெற்று,
இத்தனை புகழையும் பெற்று,
'எல்லா புகழும் இறைவனுக்கே'

என்று நீ சொன்ன பொழுது தான்,
நீ மனிதன் என்பதை உணர்ந்தேன்...

உன் பெயர் சொல்லப்பட்டதும்,
என்னை மறந்து துள்ளி குதித்தேன்;
தமிழைத்தாண்டி,
இந்தியாவைத்தாண்டி,
ஏன் இந்த உலகையே தாண்டி,
ஒரு திறமை ஜெயித்திருப்பதை கண்டு…



சப்தங்கள் அத்தனையும் சந்தோஷப்படுகின்றன!
எங்களை இந்த ஏ.ஆர்.ரஹ்மான்,
சங்கீதமாக்கிவிட்டாரே என்று!!!

கவிதைகள் அத்தனையும்,

காதோரம் வந்து சொல்கின்றன,
மௌனமான இந்த வரிகளுக்கு,
மரியாதையை உருவாக்கிவிட்டாரே என்று!!!

இசை ஈன்றெடுத்த இன்னிசையே!!!
உனக்கென்று தனி ஒரு

வாழ்க்கை வரலாறு தேவையில்லை,
உன் இசைக்குள் உயிர் வாழும்,

பல கவிகளின் கரங்களில் கசிந்த,
கவிதை வரிகள் சொல்லும்,

திறமையில் உருவான,
உன் திடமான வரலாற்றை...

இந்தியா பெற்றெடுத்த இசைப்புயலே!
சங்கத்தமிழ் பெற்றெடுத்த சங்கீதமே!
ரோஜாவில் பூத்திட்ட,
இசையுலக ராஜாவே!
மனிதன், இசையை மறந்திடும் வரை,
மனித இனத்தை,

இவ்வுலகம் இழந்திடும் வரை,
உன்னை எவரும் மறந்திடவும் முடியாது,
மறைத்திடவும் முடியாது..

கவரி மானுக்கு அதிக ரோஷம்,
எங்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு,
இசையே என்றும் சுவாசம்.

மறையட்டும் இவ்வுலக இசையின் வறட்சிகள்;
மலரட்டும் உன் சங்கீதப்புரட்சிகள்;

உன் இசைக்கோட்டைக்கு ,
அன்பான வாழ்த்துக்கள்.....

No comments:

Post a Comment